பெண்களுக்கு உண்டாகும் உதிரப்போக்குக்கு கைமருத்துவம் .

திரப்போக்கை நிறுத்தும் உதிரம்!

மனிதனைக் கீறினால் ரத்தம் வரும். மரத்தைக் கீறினாலும் ரத்தம் வருமா? வருகிறதே… உதிர வேங்கை மரத்தைக் கீறினால் கையை வெட்டியது போல் ரத்தம் வழிகிறது.

பெண்களின் உதிரப்போக்குப் பிரச்னைக்கு மாமருந்தாகச் சொல்கிறார்கள் இந்த மரத்தை! தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கீழப்புனல்வாசல் கிராமத்தில்தான் பொக்கிஷமாக உயர்ந்து நிற்கிறது இந்த உதிர வேங்கை.

உள்ளூர்வாசியான பழனியப்பன், ”இது முருகக் கடவுளின் மரம். வள்ளியைத் திருமணம் செய்துகொள்வதற்காகத் திடீரென மரமாகி நாடகம் நடத்துவார் முருகன். அப்போது வேடன் ஒருவன் அந்த மரத்தின் மீது அம்பை எய்ய, மரத்தில் இருந்து ரத்தம் கசிந்து ஓடும். அப்போதுதான் அது மரம் அல்ல; முருகப் பெருமான் என்பது தெரியும். அந்த மரம்தான் உதிர வேங்கை!

வயசுக்கு வந்த பெண்களுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்னை, அளவுக்கு அதிகமான உதிரப்போக்கு. அதனைக் குணமாக்கும் தன்மை இந்த மரத்தின் பட்டைகளுக்கு இருக்கிறது. பட்டையைக் காரம் தீண்டாத அம்மியில் அரைத்து, பாலில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உதிரப்போக்கு உடனே நின்றுவிடும். இது கர்ப்பப்பையைச் சுத்தப்படுத்தும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் சக்தியும் இந்தப் பட்டைக்கு உண்டு!” என்றவர், அரிவாளால் ஒரு பட்டையை மெள்ள வெட்டி எடுத்தார். அடுத்த கணமே மரத்தில் இருந்து ரத்தம்போன்ற திரவம் கசிய ஆரம்பித்தது.

”வெட்டுப்பட்ட இடத்தில், சாணத்தை வைத்துப் பூசிவிட்டால், ரத்தம் வருவது கட்டுப்படும்; மரமும் பட்டுப்போகாது. கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் இருக்கிற இந்த உதிர வேங்கை மரத்தை, நாங்க ரொம்பக் கவனமாகப் பாதுகாத்து வருகிறோம். இந்த உதிரவேங்கை மரத்தை கிளையை வெட்டிப் புதைத்துவைத்தோ, ஒட்டு முறையிலோ உருவாக்க முடியாது. அதுவே தானாக முளைத்தால்தான் உண்டு. குறிஞ்சி மலர் போல 12 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே இது காய் காய்க்கும்!” என்று மலைக்கவைக்கிறார்.

தமிழ்ச்செல்வி என்பவர், ”இது சாமி மரம். கல்யாணம் ஆகாதவங்க இந்த மரத்தின் பட்டையை வெட்டக் கூடாது. ஒரு முறை உதிர வேங்கை மரத்தை ஒருத்தர் விலை கொடுத்து வாங்கி மரத்தை வெட்டிட்டார். ரத்தம் ஆறு போல ஓடிக்கிட்டே இருந்துச்சு. ‘மனுஷனை வெட்டினாக்கூட இந்த அளவுக்கு ரத்தம் கொட்டாதே’ன்னு ஊரே புலம்பித் தவிச்சிட்டோம்!” என்கிறார் மரத்தை அணைத்தபடி.

சித்த மருத்துவரான தஞ்சாவூர் இளமாறன், ”ரத்தப்போக்கு நோய்க்கு உதிர வேங்கை மரத்தின் பட்டை அற்புதமான மருந்து. இந்தப் பட்டையை 4 கிராம் அளவில் எடுத்து 50 மில்லி அளவு சூடான நீரில் இரவு ஊறவைத்துவிட வேண்டும். காலையில் அந்த நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். சீதபேதி, ரத்தபேதிக்கும் இது சிறந்த மருந்து!” என்கிறார் உற்சாகமாக.

சர்க்கரை நோயைத் தடுக்கும்!

உதிர வேங்கை மரத்தைக் கீறினால் எப்படி ரத்தம் வருகிறது? தஞ்சை மருத்துவக் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியரும், சிறுநீரக மருத்துவருமான மோகன்தாஸ், ”உதிர வேங்கையை தாவரவியலில் ‘பீரோகார்பஸ் இண்டிகஸ்’ என்பார்கள். மரத்தில் இருக்கும் ‘ரெட் கிரிஸ்டல்’கள்தான் ரத்தம்போல் வரும் சாறுக்குக் காரணம். அதோடு, டானிக் ஆசிட், அமினோ ஆசிட் என பல்வேறு சத்துப் பொருட்கள் அந்த மரத்தில் இருக்கின்றன. உதிரப்போக்குக்கு மட்டும் அல்லாது, பெண்களுக்கு ஏற்படும் அடிவயிற்று வலிக்கும் இது அற்புதமான மருந்து. ஜப்பானில் இதன் இலைகளைப் பயன்படுத்தி கேன்சரைத் தடுக்கும் ஆன்ட்டி ட்யூமரைத் தயாரிக்கிறார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய மரம் இதுதான். இதில் நார்ச் சத்தும், செரிமானத் தூண்டுதலும் அதிகம் இருப்பதால், சர்க்கரை நோயைத் தடுக்கும் சக்தியும் இதற்கு உண்டு. இது உதிரத்தை உறையவைப்பதால், மன்னர்கள் காலத்தில் வெட்டுக் காயங்களுக்கும் இதைத்தான் மருந்தாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்” என்றார்.